பிரக்ஞானந்தா
செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூரின் கடைசி தொடரான சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான ஜவோகிர் சிந்தரோவுடன் மோதினார். இதில் 95-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
பிரக்ஞானந்தா தொடக்கம் முதலே சிறிது சிறிதாக வெற்றியை நோக்கி காய்களை நகர்த்தினார். ஆனால் மறுபுறம் ஜவோகிர் சிந்தரோவ் பாதுகாப்பாக விளையாடி டிரா செய்யும் நோக்கில் செயல்பட்டார். கம்ப்யூட்டர் கணக்கீட்டின்படி ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரக்ஞானந்தா விடா முயற்சியுடனும், மன உறுதியுடனும் செயல்பட்டு ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளுடன் உள்ளார்.
மற்ற ஆட்டங்களில் பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவ், அமெரிக்காவின் சாமுவேல் செவியனையும், அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ, நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரஸ்டையும் தோற்கடித்தனர். அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய ஆட்டம் டிரா ஆனது.
4,75,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இந்த தொடரில், இன்னும் ஏழு சுற்றுகள் மீதமுள்ள நிலையில் பிரக்ஞானந்தா உட்பட 5 வீரர்கள் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.