பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென் 21-12, 21-13 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜூ சுவான் செனை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-11, 18-21 என்ற செட் கணக்கில் போராடி, 47-ம் நிலை வீரரான சீன தைபேவின் சு லி யங்கிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் டென் மார்க்கின் அமாலி ஷூல்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.