

நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் கண்ட பாஜக, பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தத் தேர்தலில் 27 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் மற்றும் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
அதேநேரம், முன்னாள் தலைவர் அண்ணாமலை இத்தேர்தலில் போட்டியிடாமல் பிரச்சாரப் பணிகளில் கவனம் செலுத்தினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இருப்பினும், போட்டியிட்ட 27 இடங்களில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. 26 தொகுதிகளில் அக்கட்சி படுதோல்வியைத் தழுவியிருப்பது டெல்லி மேலிடத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறைந்தது 10 தொகுதிகளிலாவது வெற்றி கிட்டும் என நம்பியிருந்த பாஜக தலைமைக்கு, இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதால், தோல்விக்கான காரணங்களை ஆராய ‘உண்மை கண்டறியும் குழு’ ஒன்றை அமைக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர். இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மாநிலத் தலைமைப் பொறுப்பில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலையின் தலைமையில் பாஜக 24 இடங்களில் களம் கண்டபோது, ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 11.24 ஆக உயர்ந்தது. 12 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்து அதிமுகவையே பின்னுக்குத் தள்ளியது.
ஆனால், அண்ணாமலைக்கு மாற்றாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் அதிரடி செயல்பாடுகள் குறைந்து, மந்தநிலை ஏற்பட்டதே தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
டெல்லி மேலிடம் கவனிக்கும்: இதுகுறித்துப் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ஒருவர், "அண்ணாமலை தலைமையில் இருந்த அந்த எழுச்சி, இப்போது காணாமல் போய்விட்டது. கட்சியின் வாக்கு வங்கி பெருமளவு சரிந்துள்ளது. தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசின் செயல்பாடுகளை அடுத்த 6 மாதங்களுக்கு டெல்லி மேலிடம் உன்னிப்பாகக் கவனிக்கும்.
அதன் பிறகே புதிய மாநிலத் தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும். பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணாமலை மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமையே இறுதி முடிவு எடுக்கும்" என்றார்.