ஷுப்மன் கில்
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது மாநிலங்கள் சார்ந்த அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் விளையாடியுள்ளனர்.
இந்நிலையில் காயம் காரணமாக அண்மையில் முடிவடைந்த தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரின் கடைசி போட்டிகளில் ஷுப்மன் கில் விளையாடவில்லை.
தற்போது காயம் குணமடைந்துள்ள நிலையில் ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஹசாரே போட்டியில் சிக்கிம், கோவா அணிகளுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடவுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் ஷுப்மன் கில் பஞ்சாப் அணியினருடன் இணைந்து விளையாடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறும்போது, “ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ள பஞ்சாப் அணியில் வரும் ஜனவரி 1-ம் தேதி ஷுப்மன் கில் இணைந்து கொள்வார். சிக்கிம், கோவா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஷுப்மன் கில் விளையாடுவார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள மும்பை அணிக்கெதிரான போட்டியிலும் அவர் இடம்பெறுவார் எனத் தெரிகிறது” என்று தெரிவித்தன.