விளையாட்டு

சிராஜ் நீக்கம் குறித்த ஷுப்மன் கில்லின் கருத்து சரியா?

ஆர்.முத்துக்குமார்

வெலிங்டன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தவுடன் சிராஜ் நீக்க விவகாரம் இன்னும் பூதாகாரமாகியுள்ளது. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய விதங்களில் பலக் கருத்துக்களை கட்டி எழுப்பி வருகின்றனர். ஷுப்மன் கில் சிராஜ் நீக்கத்திற்குக் கற்பிக்கும் நியாயம் எந்த அளவுக்கு சரித்தன்மை உள்ளது என்பதும் இப்போது பேசுபொருளாகி வருகிறது.

அதாவது ஷுப்மன் கில் கூறுவது இதுதான், “இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை, இருந்தவற்றிலேயே மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களையே களமிறக்கினோம். சில வேளைகளில் எந்த பவுலர் ஃபார்மில் இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. எந்த பவுலர் சிறப்பான முறையில் வீசுகிறார் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

நான் சிராஜிடமும் இது குறித்துப் பேசினேன். இந்த போட்டிக்கு முன்னரே சிராஜிடம் நான் ‘இந்தப் போட்டியில் நீங்கள் ஆடுவது கடினம்’ என்று கூறினேன். அவர் இதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் நான் சொன்னதை அவர் புரிந்து கொண்டார், இதன் பின் உள்ள தர்க்கத்தை புரிந்து கொண்டார். அவரை விடுத்து ஏன் வேறு ஒருவரை அணியில் தேர்வு செய்தோம் என்பதை சிராஜ் புரிந்து கொண்டார்.

எந்த ஒரு வீரர் கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஒரு கட்டம் வரும் அதில் அவர் தன் ஆட்டத்திறனின் உச்சத்தில் இருக்க முடியாது. கரியர் முழுதும் ஒருவர் உச்சத்தில் இருக்க முடியாது. சிராஜ் இதைப் புரிந்து கொண்டார் என்றே நான் நினைக்கிறேன். அவர் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்து நன்றாக ஆடுவதில் கவனம் செலுத்தும் குணம் படைத்தவர், சிராஜ் ஒரு கிரேட் பவுலர், இந்தியாவுக்காக நிறைய பிரமாதமாக ஆடியுள்ளார், இதையெல்லாம் விட அவர் எனக்கு உற்ற நண்பர். நானும் அவரும் ஒரே டெஸ்ட்டில் தான் அறிமுகமானோம். இந்தியாவுக்கு ஆடும் முன்னரே நானும் அவரும் நண்பர்கள். ஆகவே அவரை அணியில் தேர்வு செய்யாதது கடினமான முடிவே.” என்றார் கில்.

இதில் கடைசி வாக்கியத்தை மட்டும் அவர் சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. வீரர்களின் பார்ம், சிறந்த பந்து வீச்சு என்ற உருட்டெல்லாம் எதற்கு? ஏன் இது உருட்டு என்றால் எந்த ஃபார்மின் அடிப்படையில் பிரசித் கிருஷ்ணா லெவனில் தேர்வு செய்யப்பட்டார். அவரே காயத்திலிருந்துதான் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். காயத்திலிருந்து மீண்ட அவர் என்ன ஃபார்மில் இருந்தார்?

ஆகாஷ் தீப் இவரும் காயத்திலிருந்து மீண்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்குள் வந்துள்ளார் பிளேயிங் லெவனில் சிராஜை விட இவர்கள் இருவருக்கும் முன்னுரிமை முதலுரிமை அளித்தது ஃபார்ம் அடிப்படையிலோ, சிறந்த பந்து வீச்சு அடிப்படையிலோ அல்ல என்பதும் தெளிவாகிறது.

அன்ஷுல் காம்போஜ் ஏற்கெனவே இன்னும் டெஸ்ட் என்னும் உயர்மட்டத்திற்குத் தயாராகாத பவுலர், ஆனால் அவர் தொடர்ந்து உயர் மட்ட கிரிக்கெட்டில் ஆடுகிறார் என்பதனால் தேர்வு செய்தோம் என்று கூட ஒரு நியாயம் கற்பித்துக் கொள்ளலாம், எந்த அடிப்படையில் பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஃபார்மில் இருப்பதாகவும் சிறப்பாக அதுவும் சிராஜை விடவும் சிறப்பாக வீசுவாதாகவும் ஷுப்மன் கில் கண்டார்?

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிராஜை தொடர்ந்து புறமொதுக்கி வந்து விட்டு அவர் ஃபார்மில் இல்லை என்று எதை வைத்து ஷுப்மன் கில் அவதானித்தார்?

கிரிக்கெட் வர்ணனையாளரும் சோஷியல் மீடியா ஆளுமையுமான அபிஷேக் அஸ்தானா கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது, “எல்லா ஆக்ரோஷமும் செய்தியாளர்கள் சந்திப்பிற்காக மிச்சம் பிடித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. பிரஸ் கான்ஃபரன்சில் காட்டும் ஆக்ரோஷத்தை களத்தில் காட்டும் நேரம் வந்து விட்டது.”

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT