மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் 28-ம் தேதிகளில் பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூலை 1-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று நடைபெறுகிறது. அநேகமாக டி 20 தொடர்களுக்கு கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோன்று 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியும் அறிமுக வீரராக இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி 20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 18 மாதங்களாக பார்மின்றி தவித்து வருவதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படக்கூடும். 31 வயதாகும் ஸ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
இதன் அடிப்படையிலும் அடுத்த டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் ஸ்ரேயஸ் ஐயரை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும். செப்படம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.