விளையாட்டு

‘நான் களமிறங்குவதற்காக எனக்கு முன்னால் விழும் விக்கெட்டை கொண்டாடுவதா?’ - விராட் கோலி வருத்தம்

ஆர்.முத்துக்குமார்

முன்பெல்லாம் கபில்தேவ் இறங்க வேண்டும், சச்சின் டெண்டுல்கர் இறங்க வேண்டும், தோனி இறங்க வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அவுட் ஆகிச் செல்லும் வீரரின் விக்கெட்டை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இப்போது விராட் கோலியைப் பார்ப்பதற்காக இக்கால ரசிகர்களிடத்திலும் இதே பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளதை விராட் கோலி மன வருத்தத்துடன் கண்டித்துள்ளார்.

நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 9-வது ஓவரில் அவுட் ஆனார். கோலி இறங்குகிறார் என்பதற்காக ரோஹித் சர்மா விக்கெட்டை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றதை விராட் கோலி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்று ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி இது தொடர்பாகக் கூறும்போது, “பல்வேறு போட்டிகளில் பல சமயங்களில் இப்படி நடப்பதை பார்த்திருக்கிறேன். இது பற்றி நான் எப்போதும் நல்லதாக உணர்ந்ததில்லை. தோனி இறங்குவதற்கு முன்பாகவும் இதே நிலையை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், இப்படிப்பட்ட மன நிலையில் ரசிகர்கள் இருப்பது அவுட் ஆகிச் செல்லும் வீரருக்கு விரும்பத்தக்கதாக இருக்காது. ரசிகர்களின் உற்சாகத்தைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்த மனநிலையை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இருப்பினும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் என் கவனமே தவிர, இவை பற்றியெல்லாம் அதிகம் யோசிப்பதில்லை” என்றார்.

நேற்று விராட் கோலி அதியற்புதமாக ஆடி 93 ரன்களை எடுத்து சதம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பை வீணாக்கி ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காராவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28,000 ரன்களைக் கடந்து சதனை புரிந்தார்.

ஆனால், மைல்கற்களைத் தாண்டுவது பற்றி கோலி கூறும்போது, “உள்ளபடியே கூற வேண்டுமென்றால், நான் இப்போது ஆடிவரும் முறையில் மைல்கற்களைப் பற்றி கவலையே படுவதில்லை. என்னுடைய கிரிக்கெட் பயணத்தைத் திரும்பி நோக்கினால் என் கனவு நனவானது என்பதுதான். ஆனால் இன்று நான் இந்த நிலைமையில் இருக்க கடினமான உழைப்பே காரணம்.

என் பயணத்தை மகிழ்வுடனும் நன்றியுடனும் திரும்பிப் பார்க்கிறேன். எனக்கு அது பெருமையாகவே உள்ளது” என்றார் விராட் கோலி.

SCROLL FOR NEXT