மும்பை: விமானத்தில் டிக்கெட் இல்லாததால் ரயிலியின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் சாதாரண பயணி போல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே பயணித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தத் தொடர் முழுவதுமே ஷிவம் துபே சிறப்பாக விளையாடியிருந்தார். போட்டி முடிந்த நிலையில் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு திரும்ப ஷிவம் துபே விமானத்தில் டிக்கெட் பதிவு செய்ய முயன்றார். ஆனால் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அகமதாபாத்திலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் மும்பை ரயிலின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் புக்கிங் செய்தார். இதையடுத்து அதிகாலை ரயில் நிலையத்துக்கு வந்த துபே, காரிலேயே காத்திருந்தார். ரயில் நிலையத்தில் தன்னை யாராவது அடையாளம் கண்டுகொண்டால், ரசிகர்கள் சூழ்ந்துகொள்வார்கள் என்ற பயத்தால் அவர் காரிலேயே இருந்தார்.
ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் ரயிலில் ஏறினார்.மேலும் அவர் முகக்கவசம் அணிந்துகொண்டும், தலையில் தொப்பி அணிந்துகொண்டு தன்னை மறைத்துக்கொண்டார். பின்னர் பெட்டியின் அப்பர்-பெர்த் படுக்கையில் ஏறி படுத்துக்கொண்டார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்து பெயரைப் பார்த்துவிட்டு ஷிவம் துபே என்றால், கிரிக்கெட் வீரரா என்று துபேவின் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஷிவம் துபேவின் மனைவி கூறும்போது, “அவரா... அவர் ஏன் இங்கு வரப்போகிறார்” என்று சமாளித்துள்ளார்.
3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியில் சாதாரண பயணி போல ஷிவம் துபே பயணித்த தகவல் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.