கோப்புப் படம்
அன்புமணி தற்போது பாமகவின் உறுப்பினர் கூட கிடையாது: ராமதாஸ் பதில் மனு தாக்கல்
சென்னை: ‘பாமக கட்சியின் அங்கீகாரம் ரத்து ஆனதற்கு அன்புமணியின் மோசமான செயல்பாடுகளே காரணம். அவர் தற்போது பாமகவின் உறுப்பினர் கூட கிடையாது’ என பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்
பாமகவின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து, தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில், ‘ராமதாஸ் தன்னை தானே தலைவர் என அறிவித்துக் கொண்டது பாமகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. அவர் நிறுவனர் என்ற அடிப்படையில் பாமக கட்சியில் ஆலோசனை, வழிகாட்டுதல் மட்டுமே மேற்கொள்ள முடியும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு ராமதாஸ் தரப்பு பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் 18 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘பாமக சட்ட விதிகளுக்குட்பட்டுதான் ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் இந்த வழக்கு தொடர்வதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது.
அன்புமணி பாமகவின் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டவர். அவர் கட்சியின் அங்கீகரிக்கப்படாத நபர். தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளார். பாமக சட்ட விதிகளை திருத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி தலைவராக இருந்த காலக்கட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மிக மோசமான நிலையில் இருந்தது. பாமக கட்சியின் அங்கீகாரம் பறிபோனதற்கே அன்புமணிதான் காரணம்’ என பதில் மனுவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் தாக்கல் செய்த இந்த பதில் மனு மீது வாதங்களை வைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் அப்போது அன்புமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க கூடாது என்றும், தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வழக்கை அன்புமணி தரப்பு இழுத்தடிப்பு செய்வதால் நாளையே வாதங்களை வைக்க உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாமக கட்சியில் இருவரிடையே பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கில், பாமக கட்சியின் பொதுச் செயலாரான தன்னை இணைக்காமல் ராமதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார் என பாமக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் உரிய முடிவுகளை எடுக்கும் என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பும் வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்
