ஷாருக்கான்

 
விளையாட்டு

ஷாருக்கான் 18 பந்துகளில் 59 ரன்கள் விளாசல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது கோவை | TNPL 2026

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை - திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.

அந்த அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ராதாகிருஷ்ணன் 24, சுரேஷ் லோகேஷ்வர் 31, ஆந்த்ரே சித்தார்த் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாலசுப்பிரமணியன் சச்சின் 17, ஷாருக்கான் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மழை காரணமாக சுமார் 75 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய கோவை அணி 16 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது.

ஷாருக்கான் 18 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், பாலசுப்பிரமணியம் 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி திண்டுக்கல் அணிக்கு 16 ஓவர்களில் 179 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சக்தி கருப்பசாமி 19, அதுல் விட்கர் 17, மோகித் மிட்டன் 13, கிரிஷ் 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேஸ்ட்மேனும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் கோவை அணி தரப்பில் ஜாதவேத் சுப்ரமணியன் 4, மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்களை வீழ்த்தினர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் வாயிலாக அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. நெல்லை, திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

SCROLL FOR NEXT