ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது. மும்பை அணி வீரர் சர்பிராஸ் கான் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டிகள் நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை, கோவா அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 444 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 46, அங்கிரிஷ் ரகுவன்ஷி 11 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த முஷீர் கான் 66 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்தார். 4-வது வீரராக களம்புகுந்த சர்பிராஸ் கான் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். அவர் 75 பந்துகளைச் சந்தித்து 157 ரன்களைக் குவித்தார். இதில் அவர் 14 சிக்ஸர்களை பறக்கவிட்டார். தனது அதிரடியான இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். எஸ்.லாட் 17, ஷர்துல் தாக்குர் 27, ஹர்திக் தாமோர் 53, ஷம்ஸ் முலானி 22, தனுஷ் கோட்டியான் 23, துஷார் தேஷ்பாண்டே 7 ரன்கள் எடுத்தனர்.
கோவா அணி தரப்பில் தர்ஷன் மிஸால் 3, லலித் யாதவ், வி.கவுஷிக் ஆகியோர் தலா 2, தீப்ராஜ் காவ்ங்கர் ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். பின்னர் 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவா அணி விளையாடத் தொடங்கியது. ஆனால், அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 357 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து மும்பை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது. கோவா அணி வீரர்கள் அர்ஜுன் டெண்டுல்கர் 24, காஷ்யப் பகாலே 21, ஸ்னேகல் கவுதாங்கர் 27, சுயாஷ் பிரபு தேசாய் 31, லலித் யாதவ் 64 ரன்கள் சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடிய அபிநவ் தேஜ்ராணா 70 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 100 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தீப்ராஜ் காவ்ங்கர் 28 பந்துகளில் 70 ரன்களை விளாசினார். இருந்தபோதும் அது கோவா அணியின் வெற்றிக்கு உதவவில்லை. ஆட்ட நாயகனாக சர்பிராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார்.
பரோடா வெற்றி: பரோடா, ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் பரோடா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரோடா அணியின் நித்யா பாண்டியா 122, அமித் பசி 127, கிருணல் பாண்டியா 109 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.