குவஹாட்டி பிட்ச் பொதுவாக தாழ்வாக மெதுவாகப் பந்துகள் வரும் பிட்ச் ஆகவே நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் நேற்று என்னதான் ஆச்சு இந்தப் பிட்சுக்கு? என்று கேள்வி எழுப்பும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்கள் பர்கர், ஜோப்ரா ஆர்ச்சர் ஆரம்ப அச்சுறுத்தலை ஏற்படுத்த, பிரிஜேஷ் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோரும் பர்கர், ஆர்ச்சர் வழியில் சிஎஸ்கேவை படுத்தி எடுத்தனர்.
மாறாக அதே பிட்சில் வைபவ் சூரியவன்ஷி, ஜெய்ஸ்வால் வேறு திறமைகளைக் காட்டினர். பிட்ச் நீண்ட நேரம் கவர் செய்யப்பட்டிருந்தது, இதனால் பிட்சில் வியர்த்து விட்டு ஈரப்பதம் கொஞ்சம் பவுலர்களுக்குச் சாதக நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பிட்சில் ஆட டெஸ்ட் மேட்சில் ஆடிய அனுபவம் வேண்டும், குறிப்பாக தொடக்க வீரர்களுக்கு வேண்டும், ஐபிஎல் ரக காட்டடி தர்பாருக்கு இந்தப் பிட்ச் சரிவராது, இதை ருதுராஜ், அனுபவசாலியும் முன்னா ராஜஸ்தான் ராயல்ஸருமான சஞ்சு சாம்சனுக்கும் புரியவில்லை. சிஎஸ்கே டாப் ஆர்டரை பர்கரும் ஆர்ச்சரும் காலி செய்ய தன் முற்கால அணிக்கு எதிராக அதி உணர்ச்சியுடன் பவுலிங் செய்த ஜடேஜாவும் சிஎஸ்கே சரிவில் பங்கேற்றார், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைக் காலி செய்தார்.
அதில் குறிப்பாக நன்றாக ஆடிய சர்பராஸ் கான் விக்கெட் மிக முக்கியமானது. ஜேமி ஓவர்டன் உதவியுடன் 127 ரன்களை எட்டியது சிஎஸ்கே. ஆனால் ஐபிஎல் வயதை விட 4 வயது சிறியவரான இளம் புலி வைபவ் சூரியவன்ஷி சிஎஸ்கே பந்து வீச்சை பிரித்து எறிந்து விட்டார். ருதுராஜ் கெய்க்வாட் ஆர்ச்சர் 145+ கிமீ வேகம் வீசி வரும் நிலையில் நம்ம ஊர் விஜய் சங்கரை அடிப்பது போல் ஒதுங்கிக் கொண்டெல்லாம் அடிக்க முடியுமா என்ன? குச்சி பெயர்ந்தது.
சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை நாயகனாக இருக்கலாம் ஆனால் பர்கர் அவரை நேற்று ‘இவரா அப்படியெல்லாம் ஆடினார், எப்படி?’ என்ற தொனியில் கேட்குமாறு சஞ்சுவை வீட்டுக்கு அனுப்பினார். புதுமுக மிடில் ஆர்டரில் இம்பாக்ட் பிளேயர் சர்பராஸ் கான் அற்புதமான ஹைபிளிக் சிக்சர், மற்றும் புல் ஷாட் பவுண்டரியுடன் தொடங்கினார், ஆனால் ஜடேஜாவை மிகவும் முன் கூட்டியே ஸ்லாக் ஸ்வீப் ஆடப்போய் காலியானார்.
ஆயுஷ் மாத்ரே தோள்பட்டை உயர பவுன்சரை ஹூக் செய்ய முயன்று கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனார். டேவால்ட் பிரேவிஸுக்குப் பதில் இறங்கிய மேட் ஷார்ட் செம தடவு தடவி அவுட் ஆனார். ஷிவம் துபே சிக்ஸருடன் தொடங்கினார், ஆனால் ஜடேஜா தன் முன்னாள் சகாவுக்கு பிரியாவிடை அளித்தார். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 100க்கும் கீழ் ஆல் அவுட் ஆகியிருக்கும். ஜேமி ஓவர்டன் இன்னிங்ஸினால் கவுரவமான ஒரு ஸ்கோரை எட்டியது.
இந்தப் பிட்ச் ஒருமாதிரியான பிட்ச், ராஜஸ்தான் எப்படி ஆடுகிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால், வைபவ் சூரியவன்ஷிக்கு இளம் வீரர் கார்த்திக் சர்மா, மேட் ஹென்றி பந்தில் சற்றே கடினமான கேட்சை விட்டதால் களேபரமாகிவிட்டது. ஆனால் அடுத்த பந்தே கவலைப்படாமல் வைபவ் லாங் ஆன் மேல் பெரிய சிக்சரை விளாசினார்.
இவர் அடித்த சிக்சரிலேயே ஸ்டன்னிங் சிக்ஸ் என்றால் அது மேட் ஹென்றி பந்தின் வேகத்தைக் குறைக்க சூரியவன்ஷி அதை பாயிண்ட் பவுண்டரிக்கு மேல் அடித்த ஷாட் அவர் வயது 15 என்பதை மறுக்கும் ஷாட் ஆகும். மேலும் 2 சிக்சர்களுடன் 15 பந்துகளில் அரைசதம் கண்டார் சூரியவன்ஷி.
இன்னும் விரைவில் போட்டியை முடிக்கும் உத்தியுடன் காம்போஜ் பந்தை ஒரே சுழற்று சுழற்றினார், ஆனால் டீப் கவரில் அருமையான டைவிங் கேட்ச் எடுக்க சூரியவன்ஷியின் சித்ரவதையிலிருந்து சிஎஸ்கே மீண்டது. ஜெய்ஸ்வால் 38, ரியான் பராக் 14 என்று வெற்றி சம்பிரதாயத்தை முடித்தனர்.
ஒரே பிட்ச்தான் ஆனால் இருவேறு திறமைகளைப் பார்த்தோம். சிஎஸ்கே அணியிலும் இளம் படையினர் உள்ளனர், இன்னும் அணி செட்டில் ஆகவில்லை, அடுத்த போட்டியிலிருந்து செட்டில் ஆனால் சிஎஸ்கேவும் அதிரடி ஆட்டத்தில் சளைக்காமல் இறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.