விளையாட்டு

காயத்தால் இலங்கை தொடரில் இருந்து சாய் சுதர்ஷன் விலகல்

வேட்டையன்

மும்பை: காயம் காரணமாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் சாய் சுதர்ஷன் விலகி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த இந்த தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் தொடருக்கு முன்னதாக தனது உடற்திறனை அவர் உறுதி செய்ய வேண்டி இருந்தது. அதனால் இலங்கை பயணித்துள்ள இந்திய அணி உடன் அவர் செல்லவில்லை.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைய வில்லை என தகவல் கிடைத்துள்ளது. அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டாலும், காயத்தில் இருந்து முழுமையாக குணம் பெற்று போட்டிக்கான உடற்தகுதியை பெற சற்று நேரம் எடுக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவரை இலங்கை தொடருக்காக விளையாட வைப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என கருதப்பட்டுள்ளது. அதனால் இந்த தொடரில் இருந்து அவர் விலகி உள்ளார்.

ஏற்கனவே, காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பும்ரா விலகி உள்ளார். இந்நிலையில், சாய் சுதர்ஷனும் வெளியேறி உள்ளார். அணியின் பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது வீரராக சாய் சுதர்ஷன் விளையாடுவார். அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 வயதான சாய் சுதர்ஷன், இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் மொத்தம் 383 ரன்கள் இதுவரை பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக கடந்த அக்டோபரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 87 ரன்கள் எடுத்தார். மூன்று அரை சதங்கள் பதிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT