பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 11-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதினார். இதில் சபலென்கா 6- 3, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தத் தொடரில் சபலென்கா தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். இறுதிப் போட்டியில் அவர், 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார். மார்டா கோஸ்ட்யுக் அரை இறுதியில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.