புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 15 வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் ஆகியோருக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றிருந்தது. அப்போது இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பரிசாக பிசிசிஐ வழங்கியிருந்தது. அதில் தற்போது ரூ.6 கோடி அதிகமாக ரூ.131 கோடி தொகையை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணிக்கு வழங்கப்பட உள்ளது.
பிசிசிஐ வட்டாரங்களின்படி அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் தலா ரூ.6 கோடி வழங்கப்படக்கூடும். மீதம் உள்ள ரூ.41 கோடி பயிற்சியார் மற்றும் உதவி பயிற்சியாளர்களை உள்ளடக்கிய குழுவுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் தேர்வாளர்களை வாரியம் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம். அவர்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.