லெய்ரியா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய போர்ச்சுகல் அணி ‘கே’ பிரிவில் இடம் பெற்றது.
அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 17-ம் தேதி காங்கோவுடன் மோதுகிறது. இந்நிலையில் போர்ச்சுகல் அணி நேற்று பயிற்சி ஆட்டத்தில் நைஜீரியாவுடன் மோதியது. லெய்ரியாவில் நடந்த போட்டியில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போர்ச்சுகல் அணி தரப்பில் 23-வது நிமிடத்தில் பெட்ரோ நெட்டோவும், 75-வது நிமிடத்தில் பிரான்சிஸ்கோ கான்சிகோவும் கோல் அடித்தனர். அதேவேளையில் 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டார்.
ஆட்டத்தின் இரண்டு பாதிகளிலுமே கோல்கீப்பரை மட்டுமே வீழ்த்த வேண்டிய மிக எளிதான கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தும், கிறிஸ்டியானோ ரொனால்டோ அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.
65 நிமிடங்கள் களத்தில் அவர், இருந்த நிலையில் கோல் அடிக்காதது ஏமாற்றமாக அமைந்தது. 6-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ள ரொனால்டோ இதுவரை சர்வதேச அரங்கில் 143 கோல்கள் அடித்துள்ளார்.