ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - சிக்கிம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சிக்கிம் 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஷிஸ் தாபா 79, சாய் சாத்விக் 34, கிரந்தி குமார் 34, ராபின் லிம்போ 31 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
237 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 30.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
2017-18-ம் ஆண்டு சீசனுக்கு பிறகு விஜய் ஹசாரே போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா 94 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 155 ரன்கள் விளாசினார். அவர், தனது சதத்தை 62 பந்துகளில் எட்டியிருந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 150 ரன்களை குவிப்பது இது 9-வது முறையாகும். இதன் மூலம் இந்த வகையிலான சாதனையில் அதிக முறை 150 ரன்களை விளாசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். இருவரும் தலா 9 முறை 150 ரன்களுக்கு மேல் விளாசி உள்ளனர்.
சிக்கம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் விஜய் ஹசாரே தொடரில் அதிக வயதில் சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்தார். அவருக்கு 38 வயது ஆகிறது. இந்த வகையில் கடந்த 2023-24-ம் ஆண்டு சீசனில் பெங்கால் அணியின் அனுஸ்டுப் மஜும்தார் தனது 39 வயதில் 2 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.சிக்கிம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா.