ரிஸ்வான், இமாம் உல் ஹக்
லாகூர்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஓய்வறை விவகாரங்கள் வெளியே கசிந்தது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோரிடம் பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து சீனியர் வீரர்களான முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் உள்ளிட்ட 7 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. மேலும் அவர்களுடன் உதவி பயிற்சியாளர்கள் இருவரும் உடனடியாக பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அணியில் இருந்து நீக்கப்பட்ட உடன் முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோரது செல்போன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து இருந்தனர். இந்த போன்களை அவர்கள், பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனத்திடம் வழங்கியதுடன் வீரர்கள் இருவர் மீதும் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் ஓய்வறை ரகசியங்களை வெளியே கசியவிட்டது தொடர்பாகவும், வீரர்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பாகவும் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மோஷின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இவரது அமைச்சகத்தின் கீழ்தான் புலனாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த விசாரணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தி உள்ளார். தேசிய அணி வீரர்கள் மீது, கிரிக்கெட் வாரியம் சைபர் கிரைம் புலனாய்வு அமைப்பிடம் புகார் தெரிவிப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனம் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் லாகூர் ஜோஹர் டவுனில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு அலுவலகத்தில் ரிஸ்வானும், இமாம் உல் ஹக்கும் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களைச் சமர்ப்பிக்க வீரர்கள் இருவரும் கூடுதல் அவகாசம் கோரினர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி அமர்வுகள் மற்றும் போட்டியின் போது அவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் மற்றும் சந்திப்புகள் குறித்தும், ஓய்வறை ரகசியங்கள் கசிவு குறித்தும் இரு வீரர்களிடமும் கேள்வி எழுப்பப்பட்டதாக புலனாய்வு விசாரணை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி, பாகிஸ்தான் வீரர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இரண்டு வீரர்களின் மொபைல் போன்கள் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் நிதி கணக்குகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடருக்கு முன்னும் பின்னும் ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக்கின் நிதி பரிவர்த்தனைகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஏதேனும் நிறுவனம், தனிநபர் அல்லது அமைப்புகளால் நிதி கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட காலத்தில் வீரர்களின் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட சில பரிவர்த்தனைகளும் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.