இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்
சென்னை: டெல்லியில் இருந்து குடிபெயர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டி நிரந்தரமாக குடியேற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமூக வலைதளப் பதிவு மூலம் பந்த் முறையிட்டார். அது இப்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 28 வயதான அவர், டெல்லி அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். அவரது பூர்வீகம் ஹரித்வார் என தகவல். பல்வேறு தருணங்களில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்டது உண்டு.
தற்போது டெஸ்ட் தொடருக்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் பந்த் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 12.46 மணி அளவில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்தார். அதில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை டேக் செய்திருந்தார்.
“வணக்கம் சார். எப்படி உள்ளீர்கள். நீண்ட நாட்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்க நான் முயற்சித்து வருகிறேன். என்னுடைய இருப்பிடத்தை டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்துக்கு மாற்ற விரும்புகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான முயற்சி நடக்கிறது. ஆனால், எதுவும் கைகூடவில்லை. எனக்கு இதில் உங்களது உதவி வேண்டுமென என கேட்டுக் கொள்கிறேன்.
உத்தராகண்ட் மாநிலத்தை நான் நேசிக்கிறேன். எனது பூர்வீக பூமியில் வசிக்க விரும்புகிறேன். நமது மாநிலத்தை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவபடுத்துவது எனக்கு கிடைத்த பரிசு” என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ல் டெல்லியில் இருந்து ரூர்கி நகருக்கு காரில் பயணித்த போது ரிஷப் பந்த் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் மீண்டு வந்த அவர், தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி பதில்
“அன்பிற்கினிய ரிஷப் பந்துக்கு… நீங்கள் நம் மாநிலத்தின் பெருமை. நீங்கள் உங்களது பூர்வீக பூமிக்கு திரும்ப விரும்புவது பாராட்டத்தக்கது. உங்களது கோரிக்கையை அது தொடர்பான துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். இந்த விவகாரத்தில் விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்” என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரிஷப் பந்துக்கு பதில் தந்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்குவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக அம்மாநிலத்தை சேராதவர்கள் அங்கு நிலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. குடியிருப்பு, வேளாண் நிலம் என ஒவ்வொன்றுக்கும் அங்கு விதிகள் உள்ளன.
ரிஷப் பந்தின் எக்ஸ் பதிவுக்கு நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது பதிவில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழைகள் உள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், ‘முதல்வர் என்ன உங்களுக்கு தரகரா?’ என்றும், நிலம் வாங்குவதில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள விதிமுறைகளையும் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர். அவரது விருப்பத்துக்கு சிலர் வரவேற்பும் அளித்துள்ளனர்.