விளையாட்டு

“ரிஷப் பந்த் யோசித்து செயல்பட வேண்டும்” - முகமது கைஃப் கடும் விமர்சனம்

ஆர்.முத்துக்குமார்

கால்லே டெஸ்ட் போட்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தை 288/2 என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி, 43 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட அந்த நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 460/9 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது.

புதிய பந்து கையில் கிடைத்ததும் பந்த் எடுத்த அதிரடி முடிவு மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 80 ஓவர்கள் முடிந்தவுடன் இலங்கை புதிய பந்தை எடுத்தது. அதன்பின் வீசப்பட்ட ஏழாவது ஓவரில் அறிமுக வீரர் கேஷர நுவன்தாவின் பந்தை பந்த் அவசரமாக ஸ்லாக் செய்ய முயன்றார். பந்து வைட் லாங்-ஆஃப் பகுதியில் சென்ற நிலையில், 39 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பந்தின் ஆட்டமுறையை கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், இப்படித்தான் அவர் விளையாடுவார் என்பதில் தனக்கு பிரச்சினை இல்லை என்றும், ஆனால் அந்தச் சூழலில் கொஞ்சம் கிரிக்கெட் அறிவையும் காமன் சென்ஸையும் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

சோனி ஸ்போர்ட்ஸில் கைஃப் இது தொடர்பாகக் கூறிய போது, “ரிஷப் பந்த் எப்படி ஆட்டமிழந்தார் என்பதில் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. அவர் இப்படித்தான் விளையாடுவார். ஆனால், அந்த நேரத்தில் பொது அறிவை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதுதான் எனது குறை. புதிய பந்து எடுக்கப்பட்ட முதல் ஓவர் அது. அந்த ஓவரிலேயே அவர் மூன்று முறை பந்தை தூக்கி அடிக்க முயன்றார். புதிய பந்தை 5 அல்லது 6 ஓவர்கள் வரை பார்த்து விளையாடியிருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் வழக்கம்.

அந்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் மேலேறி வந்து அடிக்க முயன்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேட்ஸ்மேன் கொஞ்சம் கணக்கிட்டு விளையாட வேண்டும். ஒருவர் 150 ரன்களில் இருந்தாலும், புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் சில பந்துகளை விட்டுப் பார்த்துதான் விளையாடுவார். அந்த விஷயத்தில் நான் பந்துக்கு சில மதிப்பெண்களை குறைக்கிறேன்.

எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது சூழ்நிலைக்கு ஏற்ப பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை ஒரு பேட்ஸ்மேன் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற வீரர்கள் யாராக இருந்தாலும், இதுபோன்ற சூழலில் கொஞ்சம் காமன் சென்ஸைப் பயன்படுத்துவார்கள்,” என்று முகமது கைஃப் கூறினார்.

SCROLL FOR NEXT