ரிங்கு சிங்
ராஜ்கோட்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் உத்தரபிரதேச அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் சண்டீகர் அணியை சாய்த்தது. உ.பி.அணியின் கேப்டன் ரிங்கு சிங், ஆர்யன் ஜுயால் ஆகியோர் சதம் விளாசினர்.
ராஜ்கோட்டில் உள்ள சனோசரா மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய உ.பி. அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யன் ஜுயால் 118 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். துருவ் ஜூரெல் 67, சமீர் ரிஸ்வி 32 ரன்கள் குவித்தனர். கேப்டன் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சண்டீகர் அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் உ.பி. வீரர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி 29.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் மனன் வோரா 32 ரன்கள் சேர்த்தார். உ.பி. அணியின் ஜீஷன் அன்சாரி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.