விளையாட்டு

WPL 2026: முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி!

வேட்டையன்

வதோதரா: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

கடந்த 9-ம் தேதி மகளிர் பிரீமியர் லீக் - 2026ம் ஆண்டுக்கான சீசன் தொடங்கியது. மொத்தம் 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்த சீசனின் 18-வைத்து லீக் ஆட்டம் வியாழக்கிழமை இரவு வதோதராவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் விளையாடின.

          

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என்ற சூழலில் ஆர்சிபி இருந்தது.

இந்த லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங் 41, தீப்தி சர்மா 55 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி சார்பில் டி கிளார்க் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் கிரேஸ் ஹாரிஸும், ஸ்மிருதி மந்தனாவும். கிரேஸ் ஹாரிஸ் 75 மற்றும் ஸ்மிருதி 54 ரன்கள் எடுத்தனர். 13.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது அந்த அணி. இதன் மூலம் இந்த சீசனில் 8 ஆட்டங்களில் 6 வெற்றியை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT