துணை மேயர் தலைமையில் மதுரை மாநகராட்சி கூட்டம் அறிவிப்பு: புறக்கணிக்க திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
2 min read

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் மண்டலத்தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்கள், கூட்டம் நடக்கும் நாளில் கையெழுத்துப் போட்டுவிட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி, சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் பதவியை இழந்தார். அவரை போலவே, 5 மண்டல தலைவர்களிடமும், கட்சித்தலைமை ராஜினமா கடிதம் பெற்றது. இவர்களுக்கு பதிலாக தற்போது வரை புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. மேயர், மண்டலத்தலைவர்கள் இல்லாமலே ஆணையாளர் சித்ரா தலைமையிலே இதுவரை நிர்வாகம் நடைபெற்றது.

புதிய மேயரை தேர்வு செய்வதில், உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோரிடம் ஒற்றுமை இல்லை. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த கவுன்சிலரை மேயராக்கினால், மற்ற சமூகத்தின் வாக்கு வங்கி பாதிக்கும் என்று திமுக தலைமை கருதுவதால், சொத்துவரி முறைகேடு வழக்கை காரணம் காட்டி, புதிய மேயரை நியமிக்காமலே ஆணையாளர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தது. அவரின் நிர்வாகத்தில் திருப்தியடைந்த தமிழக அரசு, தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் வரை, மேயர் இல்லாமலே மாநகராட்சி நிர்வாகத்தை நடத்திட திட்டமிட்டிருந்தது.

மேலும், துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அவரது தலைமையில் மாநகராட்சி கூட்டத்தை நடத்திவிடக்கூடாது என்பதிலும் திமுக மேலிடம் மிக கவனமாக இருந்தது. துணை மேயரை ‘பொறுப்பு’ மேயராகவும் செயல்படவிட திமுக மேலிடம் அனுமதிக்கவில்லை. கொதிப்படைந்த துணை மேயர் நாகராஜன், நேரடியாகவும், மறைமுகமாவும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்தார்.

திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான திரைமறைவு மோதலில் மாநகராட்சி அதிகாரிகள் மாட்டிக் கொண்டு தவித்தனர். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முக்கிய அங்கம் வகிப்பதால், திமுக மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிரான அவரது நெருக்கடியையும், செயல்பாடுகளையும் தட்டிக்கேட்க முடியாமல் திமுக உள்ளூர் அமைச்சர்களும், நிர்வாகிகளும் புழுங்கி வந்தனர்.

இந்நிலையில், துணை மேயர் நாகராஜனுக்கு ஆதரவாக ஒருவர், அவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மாநகராட்சி கூட்டம் நடத்தப்படாததால் கவுன்சிலர்கள் பதவிக்கு ஆபத்து உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி கூட்டத்தை நடத்த நகராட்சி நிர்வாகத்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.

தற்போதும் கூட, திமுக மேலிடம் நினைத்திருந்தால் புதிய மேயரை அறிவித்து அவரை பொறுப்பேற்க வைத்து, அவரது தலைமையிலே மாநகராட்சி கூட்டத்தை நடத்தியிருக்கலாம். ஆனால், புதிய மேயரை நியமிப்பதில் உள்ளூர் கட்சியினரை பகைத்துக் கொண்டு தடாலடியாக ஒரு முடிவுக்கு வர முடியாததால், வேறு வழியில்லாமல், உயர் நீதிமன்ற உத்தரவுபடி துணை மேயர் தலைமையில் மாநகராட்சி கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்நிலையல், மாநகராட்சி மன்ற செயலர் சித்ரா, மாநகராட்சி கூட்டம் துணை மேயர்/மேயர்(பொ) தலைமையில் பிப்.10-ம் தேதி காலை நடப்பதாகவும், இக்கூட்டத்தில் துணை மேயர்/மேயர் (பொ) தலைமையில் 2026-2027ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பதால் முன்னாள் மண்டலத்தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘மேயர், மண்டலத்தலைவர்களை நியமிக்காவிட்டாலும் பரவாயில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயரை, பொறுப்பு மேயராக கூட்டம் நடத்துவதற்கு இதுவரை அனுமதிக்காதததால் மனதில் மனகஷ்டங்கள் இருந்தாலும் கவுரவமாக வார்டுகளில் பணிகளை மேற்கொண்டோம். தற்போது அதற்கும் ஆபத்து வரும் நிலையில், 67 திமுக கவுன்சிலர்களாக உள்ள எங்களை பற்றி கொஞ்சம் சிந்திக்காமல் 4 கவுன்சிலர்களே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் மாநகராட்சி நிர்வாகத்தை விட்டுக் கொடுத்துள்ளதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், நாங்கள் கூட்டத்தில் பேசுவதற்கு, துணை மேயர் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் எங்கள் கேள்விகளை எழுதிக் கொடுக்க வேண்டுமா? ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு எங்களை கட்சித்தலைமை, கூட்டணி கட்சி துணை மேயரிடம் தலைகுனிய வைத்துவிட்டது. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் உரிமைகளையும், கவுரவத்தையும் கட்சித்தலைமை இழக்க செய்துள்ளது. கட்சித்தலைமையின் இந்த நடவடிக்கை, கண்டிப்பாக வரும் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

கூட்டத்திற்கு வராமல் புறக்கணிக்கலாம் என்றால், மூன்று மாதமாக கூட்டம் நடக்காததால் கண்டிப்பாக வந்து கையெழுத்து போட்டே ஆக வேண்டும். ஆனால், கூட்டணியை மதிக்காமல் நீதிமன்றத்தில் வழக்குப்போட வைத்து சாமர்த்தியமாக பொறுப்பு மேயராக ஒரு முறையாவது கூட்டத்தை நடத்திட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்ட துணை மேயர், கவுன்சிலர்கள் கையெழுத்திடும் நோட்டை, வெளியே வைக்கவிடாமல் கூட்ட அரங்கிற்கு வரவழைத்து கையெழுத்து போடவும் வைப்பார். ஆனாலும், கையெழுத்துப் போட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்கலாமா? என்று ஆலோசிக்கிறோம்’’ என்றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in