அயர்லாந்தில் 0-2 என்று தொடரை இழந்த நிலையில், இங்கிலாந்தில் 2-வது டி20 போட்டியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி இழந்தது. நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் ஒரே ஓவரில் 29 ரன்களைக் கொடுத்து லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் போட்டியை இங்கிலாந்துக்குத் தாரை வார்த்தார்.
கடைசியாக ஒருவழியாக கடும் அழுத்தம் கொடுத்த பிறகு கம்பீர் சூர்யவன்ஷியை ஆடும் லெவனில் சேர்த்தார். இங்கிலாந்து இதே கிரவுண்ட்டில் தான் கடந்த போட்டியில் டி20-யில் 304 ரன்களை விளாசியது. சூர்யவன்ஷி இறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை ரேம்ப்-ஸ்வீப் ஷாட்டில் பைன்லெக்கில் ஒரு சிக்ஸரையும் ஜாஷ் டங்கை லாங் ஆனில் ஒரு சிக்ஸரையும் அடித்து வில் ஜாக்ஸ் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அவ்வளவு அவசரம் தேவையில்லை. வில் ஜாக்ஸ் புத்திசாலித்தனமான பவுலர், உரிய மரியாதையை அவருக்கு அளிக்க வேண்டும். போகப்போக கற்றுக் கொள்வார் சூர்யவன்ஷி.
மாறாக அபிஷேக் சர்மா அட்டகாசமாக ஆடி 24 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்தார். 2 விக்கெட் இழப்புக்கு 65 ரங்களில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் (37 ரன்கள்), இஷான் கிஷன் (49 ரன்கள்) ஸ்கோரை 130 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஷ்ரேயஸ் அய்யர் டாசனை சிக்ஸ் அடித்த அதே ஓவரில் கேட்ச் ஆகி வெளியேற, இஷான் கிஷன், சாம் கரன் ஓவரில் செம தடவு தடவி ஒருவழியாக தடவல் 49 ரன்களில் வெளியேறினார்.
ஷிவம் துபேவுக்கு ஒன்றுமே வரவில்லை, பேட்டிங்கும் வரவில்லை பவுலிங்கும் கொடுப்பதில்லை. அவர் எதற்கு அணியில் இருக்கிறார் என்பது அவருக்கும் தெரியவில்லை, கம்பீருக்கும் தெரியவில்லை. கடைசியில் திலக் வர்மா ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களை விளாச இந்திய அணி ஒரு வழியாக 190 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.
இங்கிலாந்து ஒரு கட்டத்தில் சேசிங்கில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் என்று தோல்வி முகமே காட்டி வந்தது. 28 பந்துகளில் 58 ரன்கள் தேவை. அதாவது ஓவருக்கு 12.43 ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது. அப்போதுதான் மிக அருமையாக ஷ்ரேயஸ் அய்யர், அர்ஷ்தீப் சிங்கைப் பவுலிங்கில் கொண்டு வந்து எக்ஸ்ட்ராக் அவரில் அபாயகர டாம் பேண்ட்டனை நிறுத்தி வைத்து வீழ்த்தினார். வருண் பந்தில் வில் ஜாக்ஸ் எல்.பி.ஆக 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் என்று ஆனது. முன்னதாக, ஹாரி புரூக், புரூட்டலாக 15 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 39 ரன்களை விளாசி, அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். நேற்று ஆகச்சிறந்த பவுலர் என்றால் அக்சர் படேல்தான் அவர் 4 ஓவர் 20 ரன் மிக முக்கிய விக்கெட்டான அபாய ஹாரி புரூக் விக்கெட் என்று அசத்தினார்.
இங்கிலாந்து தோல்வி முகம் காட்ட வைத்ததன் பின்னணியில் அசத்தல் பவுலிங் சேஞ்ச், பீல்டிங் சேஞ்ச் செய்த ஷ்ரேயஸ் அய்யர் பெரிய தவறு செய்தது எப்போதெனில் ரவி பிஷ்னாயை கொண்டு வந்ததுதான். இளம் அதிரடி வீரர் ஜேக்கப் பெத்தெல் கிரீசில் இருக்கும் போது இந்த சேஞ்ச் செய்திருக்கக் கூடாது.
ஃபிரண்ட் ஃபுட் நோ-பால் என்றால் பிஷ்னாயை மன்னிக்கலாம், தாறுமாறான ரன் அப்பில் சைடு கிரீசில் வெளியேயிருந்து வீசினால் சும்மா இருப்பார்களா 2 நோ-பால்கள், 2 ஃப்ரீ ஹிட்டும் சிக்ஸ். இது போக இன்னொரு சிக்ஸரையும் விளாசினார் பெத்தெல். ஓரே ஓவரில் 29 ரன்கள் என்று போட்டியையே காலி செய்து விட்டார் ரவி பிஷ்னாய். இவரை எங்கிருந்து கொண்டு வந்து சேர்த்தனர் என்று தெரியவில்லை.
பெத்தெல் 46 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 76 நாட் அவுட். ஆர்ச்சர் 10 நாட் அவுட். இங்கிலாந்து ஓரு ஓவர் மீதமிருக்கையில் எளிதில் வென்று 2 போட்டிகள் முடிவுற்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் ஜேக்கப் பெத்தெல்.