புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே பெங்களூரு, ஹைதராபாத், குஜராத் அணிகள் முன்னேறி விட்டன.
தற்போது ராஜஸ்தான் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளதால் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றில் மீதியிருக்கும் ஒரேயொரு இடத்துக்கு ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி, சிஎஸ்கே ஆகிய 5 அணிகள் மோதுகின்றன. எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவுள்ளது என்பதைப் பார்க்கும்போது ராஜஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் பாக்கியுள்ளது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக முன்னேறிவிடும். ஒருவேளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி கண்டால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காகக் காத்திருக்கவேண்டும். இதேபோல் கொல்கத்தா அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஒரு வேளை கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகளைபெறும். ஆனாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
ஒருவேளை கொல்கத்தா ஒரு போட்டியில் தோல்வி கண்டால் கூட அந்த அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தங்களின் மீதமுள்ள ஆட்டங்களில் ஒன்றில் தோல்வி கண்டாலோ, சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டாலோ, ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். அதேநேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது கடைசி 2 போட்டிகளில் வென்றாலோ அல்லது பஞ்சாப் கிங்ஸ் தங்களின் மீதமுள்ள ஆட்டத்தில் வென்றாலோ, ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேற்றப்பட்டு விடும்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களின் ஆட்டங்களில் தோற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களின் கடைசி ஆட்டத்தில் வென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளைப்பெற்று சமநிலையில் இருக்கும். அப்போது நிகர ரன் விகித (என்ஆர்ஆர்) அடிப்படையில் எந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் என்பது முடிவு செய்யப்படும். எப்படி இருந்தாலும், சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த நிலை. ஒருவேளை சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டால் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் என்பதே உண்மை.