சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் இடையிலான போட்டி சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது.
தனது 10-வது சதத்தை விளாசிய பிரதோஷ் ரஞ்ஜன் பால் 215 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 138 ரன்களும், குருசாமி அஜிதேஷ் 34 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். முன்னதாக நாராயண் ஜெகதீசன் 52, பாபா இந்திரஜித் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். விமல் குமார் 11, ஆந்த்ரே சித்தார்த் 13 ரன்களில் நடையை கட்டினர்.
சண்டிகர் அணி தரப்பில் பாக்மெண்டர் லாத்தர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். நிகில் சர்மா, நிஷுங்க் பிர்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.