

நிதின் நவீன், ப.சிதம்பரம்
புதுடெல்லி: “3 கோடி ஊடுருவல்காரர்கள் குறித்து நேற்று (நவ.1) நீங்கள் பேசி இருந்தீர்கள். அவர்கள் யார்? அவர்கள் குறித்த விவரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளதா?” என்று பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு ப.சிதம்பரம் கேள்வி.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளது முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ப.சிதம்பரம். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
“பாஜக தலைவருக்கு சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்:
>> 3 கோடி ஊடுருவல்காரர்கள் குறித்து நேற்று (நவ.1) நீங்கள் பேசி இருந்தீர்கள். அவர்கள் யார்? அவர்கள் குறித்த விவரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளதா?
>> ஊடுருவல்காரர்கள் யார் என்பதை ஹரியானா மக்கள் அறிவார்கள் என்று கூறினீர்கள். அப்படியென்றால் அது குறித்து ஹரியானா மாநில அரசும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர்களது பெயரை வெளியிடாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு மவுனம் காப்பது ஏன்?
>> ஊடுருவல்காரர்களை யாரும் பாதுகாக்கவில்லை. அதனால் அவர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
>> ஊடுருவல்காரர்கள் மூன்று கோடி பேர் என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏன் 13.30 கோடி பேரை நீக்கினீர்கள்?
>> மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் போராட்டம் மூலம் தங்கள் வாக்குரிமையை மீண்டும் பெற்றவர்களும் ஊடுருவல்காரர்கள் என்று சொல்வீர்களா?” என பதிவிட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹரியானாவின் ரோத்தக் நகரில் பாஜகவின் சார்பில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம் என்கிற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ப.சிதம்பரம் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.