விளையாட்டு

துப்பாக்கிச் சுடுதல், மகளிர் வில்வித்தையில் தங்கம்: பிரதமர் மோடி பாராட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்

வெற்றி மயிலோன்

ஐச்சி-நகோயா (ஜப்பான்): ஐச்சி - நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் (trap shooting) ஜோடியான நீரு தண்டா - கைனன் செனாய் மற்றும் மகளிர் காம்பவுண்ட் வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஜோதி சுரேகா வென்னம், ப்ரித்திகா பிரதீப், சிக்தா தனிபார்த்தி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

புதன்கிழமை நடைபெற்ற ட்ராப் கலப்பு துப்பாக்கி சுடும் போட்டியில், நீரு தண்டா மற்றும் கைனான் செனாய் ஜோடி 34 புள்ளிகள் பெற்று புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. ட்ராப் கலப்பு அணிப் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். கத்தார் அணி முன்னதாக படைத்திருந்த 30 புள்ளிகள் என்ற ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையை இந்த ஜோடி முறியடித்தது. இப்போட்டியில் கத்தார் 32 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனா 23 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.

அதேபோல இந்திய மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணி சீனாவை 238-234 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் 2014-ல் தென் கொரியா படைத்த 238 புள்ளிகள் என்ற உலக சாதனையை இந்த அணி சமன் செய்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவுக்கு ஒரு தங்கம். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணிப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், ப்ரித்திகா பிரதீப் மற்றும் சிக்தா தனிபார்த்தி ஆகியோருக்கு வாழ்த்துகள். இவர்களின் செயல்பாடு உலக சாதனையைச் சமன் செய்துள்ளதால் இது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. நமது வில்வித்தை வீராங்கனைகளுக்கு இது ஒரு மகத்தான சாதனையாகும். ஒட்டுமொத்த அணிக்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில், " 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டிராப் கலப்பு அணி பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நீரு தண்டா மற்றும் கைனன் செனாய் ஆகியோருக்கு வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் ஆசிய சாதனை படைத்த இந்த இந்திய இணை, இப்பிரிவில் இந்தியாவுக்கான முதல் ஆசிய விளையாட்டுத் தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது.

இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டுக்கு இது ஒரு மறக்கமுடியாத சாதனையாகும். இரு விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுகள். அவர்கள் வருங்காலத்திலும் தொடர்ந்து சிறந்து விளங்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT