

சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் திமுகவை குற்றம்சாட்டிய முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ஆதாரம் கேட்டு, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததாக முதல்வர் விஜய்யும், வீரமணி மீதான வழக்கை திமுக முடித்து வைத்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும், இதற்காக ரூ.500 கோடியை திமுக அன்பளி்ப்பாக பெற்றுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமாரும் பொதுவெளியில் திமுக மீது வீண்பழி சுமத்தும் நோக்கில் இஷ்டம்போல கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இத்தகைய குற்றச்சாட்டுகள் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடி தொடர்புடையவை என்பதால் இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி அவர்கள் 3 பேருக்கும் சம்மன் அனுப்பி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், திமுகவை களங்கப்படுத்தும் நோக்கில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் மற்றும் ஆவணங்கள் இருந்தால் அதை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்காதது ஏன்? அந்த ஆவணங்கள் ரகசியமாக இவர்களுக்கு கிடைத்துள்ளதா? பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது.
ஏனெனில், சிறார்களுக்கு பாலியல் ரீதியாக கொடுமை இழைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்கவோ, மறைக்கவோ இடம் கொடுக்காமல் அவற்றை உடனடியாக சேகரிக்க வேண்டும்.
அவதூறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தாலோ, தகவல்கள், ஆதாரங்களை மறைத்து இருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீ்ழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.