பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் | கோப்புப்படம்
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. முதல் முறையாக அந்த அணி பட்டம் வென்றதை தொடர்ந்து ஜூன் 4-ம் தேத பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த கர்நாடக மாநில அரசு தடைவிதித்தது.
மேலும் மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றையும் அரசு நியமித்தது. இந்த குழு மைதானத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியது. இதுஒருபுறம் இருக்க வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அரசு தரப்பு மற்றும் விசாரணைக்குழுவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு பணிகள் திருப்திகரமாக இருப்பதாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக கிரிக்கெட் சங்க செய்தி தொடர்பாளரான வினய் மிருத்யுஞ்சயா கூறும்போது, “பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற எம்.சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு (கேஎஸ்சிஏ) கர்நாடக அரசின் உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் உறுதியுடன் உள்ளது” என்றார்.
இதற்கிடையே ஆர்சிபி அணி இந்த சீசனுக்கான போட்டிகளை ராய்ப்பூர் மற்றும் புனேவில் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டது. தற்போது கர்நாடக அரசு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி உள்ளதால் ஆர்சிபி அணி உற்சாகம் அடைந்துள்ளது. மேலும் அந்த அணி 300 முதல் 350 ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய கேமராக்களை மைதானத்தில் நிறுவ முன்வந்துள்ளது. இதற்காக ரூ.4.50 கோடியை செலவிட தயாராக இருப்பதாக ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.