மதுரை ரேஸ் கோர்ஸ் சர்வதேச ஹாக்கி அரங்கில் இந்தியா-சுவிட்சர்லாந்து போட்டியை வெளிநாட்டினருக்கான கேலரியில் அமர்ந்து கண்டுகளித்தவர்கள்.
மதுரை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் மதுரையில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-சுவிட்சர்லாந்து அணிகள் இடையேயான போட்டியை பார்க்க முடியாமல் உள்ளூர் ரசிகர்கள் பரிதவித்தனர். முன்கூட்டியே வழங்கப்பட்ட பாஸ், டிக்கெட்டு களால் விஐபிகளின் குடும்பத்தினர் மட்டும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்தனர்.
ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், கடந்த நவ. 28-ல் தொடங்கி மதுரை, சென்னையில் நடந்து வருகிறது. டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது. மதுரையில் ரேஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தில் இப்போட்டிகள் நடக்கின்றன.
உலகக்கோப்பை போட்டிகளுக் காக மதுரையில் புதிதாக சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டதை பெருமையாக உள்ளூர் மக்கள் நினைத்தனர். சர்வதேச ஹாக்கி போட்டிகளை இனி மதுரையிலேயே நேரில் கண்டுகளிக்கலாம் என பேராவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடக்கும் ஹாக்கி போட்டிகளை நேரில் பார்க்க, தனியார் மொபைல் செயலியில் இலவசமாக முன்பதிவு செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை கொண்டு வருவோர், 6-வது நுழைவு வாயில் வழியாக அரங்கினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
5-வது நுழைவுவாயில் செய்தியாளர்களும், 4, 3-வது நுழைவு வாயில்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் சர்வதேச ஹாக்கி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், மொபைல் செயலியில் முன்பதிவு செய்ய முயன்றால் பெரும்பாலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாகவே தகவல் வருகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பெரும் முயற்சி செய்தும், இந்த செயலில் டிக்கெட்டுகளை பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதுகுறித்து ஹாக்கி சம்மேளன அதிகாரிகளிடம் கேட்டால், ‘‘முன்பதிவு தொடங்கியவுடன் விற்று தீர்ந்துவிடுகிறது, நாங்கள் என்ன செய்ய முடியும்’’ என்கின்றனர். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெறுவதில் நீடிக்கும் குளறுபடிகளால் போட்டி நேரில் பார்க்க ஆர்வமுள்ள பொதுமக்களும், பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போட்டியாக இந்தியா-சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடிய போட்டி நடந்தது. இப்போட்டியை காண, ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதலே குவியத் தொடங்கினர். ஆனால், அவர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்கள் கிடைக்கவில்லை.
பெரும் பாலான கேலரிகளில் மாலை முதலே விஐபி-கள், அரசியல்வாதிகள், அனைத்து துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் அமர வைக்கப்பட்டனர். ஆனால் கேலரிகளிலும் பெருங்கூட்டம் திரண்டதால் போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் தவித்தனர். வெளிநாட்டினருக்கான கேலரிகளில்கூட, விஐபிகளின் குடும்பத்தினர் ராஜமரியாதையுடன் அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர்.
அதனால் இந்திய அணியை உற்சாகப்படுத்த ஆவலுடன் வந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பலர் ஆங்காங்கே நுழைவு வாயில்களில் நுழைய முயற்சி செய்தபோதும், போலீஸார் அவர்களை அனுமதிக்கவில்லை.
அதனால் பலர் அரங்கத்துக்கு வெளியே இருந்தவாறே, மைதானத்திலிருந்து வந்த ஆரவாரம், விசில், வெடிச் சத்தங்களை கேட்டு ஆறுதல் பட்டு திரும்பிச் சென்றனர். இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டிக்கெட் விற்பனை, கேலரியில் அனுமதிப்பது போன்ற அனைத்தும் ஹாக்கி இந்தியாவின் அதிகாரத்துக் குட்பட்டது. போட்டிகளுக்கான அரங்கத்தை மட்டும் நாங்கள் வழங்கியுள்ளோம்’’ என்றார்.