வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்ததையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டாக்கா அருகே உள்ள ஷெரி பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை படைத்தது.
சொந்த மண்ணில் வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகும். அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து மூன்று டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்ததும் பாகிஸ்தான் ரசிகர்களை ஆத்திரப்படுத்தியது என்பதோடு ஜிம்பாப்வேவுக்குப் பிறகு வங்கதேசத்திடம் 3 டெஸ்ட்களை இழந்த இழிவைப் பாகிஸ்தான் அணி சந்தித்துள்ளது என்பதும் ரசிகர்களின் கோபாவேசத்திற்குப் பிரதான காரணமாக அமைந்தது.
போட்டியின் இறுதி நாளில் 268 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் இருப்பது போல தோன்றியது. அறிமுக வீரர் அப்துல்லா ஃபாசல் அமைதியாகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் எடுத்தார். மேலும் சல்மான் அலி ஆகாவுடன் இணைந்து முக்கிய கூட்டணியையும் அமைத்தார்.
ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு போட்டியின் போக்கு முழுவதும் மாறியது. அனுபவம் மிக்க சுழற்பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் அப்துல்லா ஃபாசலை வெளியேற்றி பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். அடுத்த ஓவரிலேயே வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகாவை அவுட் செய்து பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அதன்பிறகு இளம் வேகப்பந்து புயல் நகித் ராணா தனது தீவிரமான பந்துவீச்சால் போட்டியை முழுமையாக கைப்பற்றினார். 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், பாகிஸ்தான் நடுவரிசை மற்றும் கீழ்வரிசையை சிதறடித்தார். குறிப்பாக முகமது ரிஸ்வான் விக்கெட்டை இன் கட்டர் பந்தில் சாய்த்தது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை ஈர்த்தது.
போட்டிக்கு முன் “எந்த இலக்கையும் எங்களால் துரத்த முடியும்” என்று நம்பிக்கையுடன் பேசிய ரிஸ்வான், அதிரடியான நஹீத் ராணாவின் பந்தில் கிளீன் போல்டானது ரசிகர்களிடையே கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானது. இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் மீது ரசிகர்கள் கடும் கோபம் வெளியிட்டனர். “ஷான் மசூத் தானாகவே கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு ரசிகர்,
“வங்கதேசத்திடம் தொடர்ந்து மூன்று டெஸ்ட் தோல்வி. ஷான் மசூத்தின் தலைமையில் 15 போட்டிகளில் 11 தோல்விகள். இது பேரழிவு,” என விமர்சித்தார்.
இந்த தோல்வியின் விளைவாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலிலும் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்தது. ஐந்தாவது இடத்தில் இருந்த அந்த அணி தற்போது ஏழாவது இடத்துக்கு சரிந்துள்ளது. இதனால் இந்திய அணி ஒரு இடம் முன்னேற, வங்கதேசமும் எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.