துபாய்: டி20 உலகக் கோப்பை தொடரில் ஊக்க மருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் முகமது நவாஸுக்கு 3 மாதம் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 7-ல் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு முகமது நவாஸுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர், தடை செய்யப்பட்ட கார்பாக்ஸி-டிஹெச்சி என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு 3 மாதம் தடை விதித்துள்ளது ஐசிசி. இதை முகமது நவாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவர், ஊக்கமருந்து தடுப்பு மறுவாழ்வு திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவுடன் இந்தத் தண்டனைக்காலம் ஒரு மாதமாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தகுதி நீக்கக் காலம் மே 1 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. மே 1 முதல், முகமது நவாஸ் செய்த அனைத்து சாதனைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.