போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்று பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு, தொடரை 1-1 என்று சமன் செய்து நிறைவு செய்தது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி, அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இது. எனவே இது ஓர் அரிய ஓவர்சீஸ் வெற்றிதான் பாகிஸ்தான் அணிக்கு.
வெறும் 75 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான், இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.
இரண்டாவது முறையாக பாபர் அஸம் கேப்டன் பொறுப்பேற்றுள்ள நிலையில் இது சிறப்பான தொடக்கமாக அமைந்தது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் கடுமையான நெருக்கடியில் இருந்தது. நான்காவது நாள் தொடங்கியதும் அலி உஸ்மான் தனது துல்லியமான பந்துவீச்சால் மீதமிருந்த விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றினார். கெமர் ரோச், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமர் ஜோசப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், மேற்கு இந்தியத் தீவுகள் 117 ரன்களுக்குச் சுருண்டு பெரிய இலக்கை அமைக்கும் வாய்ப்பை இழந்தது.
75 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கத்தில் இமாம்-உல்-ஹக் விக்கெட்டை இழந்தாலும், அசான் அவைஸ் மற்றும் பின்னர் பாபர் அஸம், அப்துல்லா ஷபீக் இணைந்து அணியை வெற்றிப் பாதையில் நிலைநிறுத்தினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோமெல் வாரிக்கனை தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட பாபர் அஸம், வெற்றி ரன்களையும் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் வெளிநாட்டில் தொடர்ந்து எட்டு டெஸ்ட் தோல்விகள் என்ற மோசமான தொடர்ச்சிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்த அப்துல்லா ஷபீக்கின் ஆட்டமும், அலி உஸ்மான் மற்றும் சஜித் கான் தலைமையிலான பந்துவீச்சும் பாகிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) புள்ளிப்பட்டியலிலும் பாகிஸ்தான் முன்னேற்றம் கண்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளை முந்தி ஒரு இடம் மேலேறிய பாகிஸ்தான் தற்போது எட்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது; மேற்கு இந்தியத் தீவுகள் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.