

ஷேக் ஹசினா
புதுடெல்லி: எங்கள் ஆட்சிக்கு எதிரான சதி தான் வங்கதேசத்தில் கடந்த 2024-ல் நடைபெற்ற மாணவர் போராட்டம் என்று ஷேக் ஹசினா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சங்க நிகழ்வில் ஒலி வடிவில் தனது கருத்துகளை ஷேக் ஹசினா பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த 2024-ல் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. அது எங்கள் ஆட்சிக்கு எதிரான சதி தான். அது திட்டமிடப்பட்டது. ஜனநாயக முறையை கடந்து புதிய ஆட்சியை அமைக்க மேற்கொண்ட முயற்சிதான் அந்த மாணவர் போராட்டம். வரும் டிசம்பரில் எனது நாட்டின் மக்களிடம் திரும்புவேன். என் தேசத்தை நேசிக்கிறேன்.
ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் என்னை சிக்க வைக்க முயற்சிகள் நடக்கலாம். ஆனால், மக்களுக்கான எனது கடமையையோ, எனது வாழ்வையோ தீர்மானிக்கும் சக்தியாக அச்சுறுத்தல் ஒருபோதும் இருக்காது என்று தெரிவித்தார்.
தனது உரையை தொடங்குவதற்கு முன்பு தனது தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான், 1971 விடுதலைப் போரில் வீர மரணம் அடைந்தவர்கள், 1975-ல் ராணுவ கிளர்ச்சியில் கொல்லப்பட்ட தனது உறவினர்களை அவர் நினைவு கூர்ந்தார்.
நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம்
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து பிரதமர் இல்லம் முற்றுகையிடப்பட்டதால், ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அதன்பின் அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்றது. தற்போது அங்கு தேர்தல் நடைபெற்று பிஎன்பி கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. பிரதமராக தாரிக் ரகுமான் உள்ளார்.
மாணவர்கள் போராட்டம் அடக்குமுறை தொடர்பான வழக்கில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்தார். ஷேக் ஹசினாவை வங்கதேச அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு வங்க தேச அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறது. இதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.