கண்டி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இலங்கையை 5 ரன்களில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த பிரிவில் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதனால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த ஆட்டம் இலங்கையில் கண்டி நகரில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி சதமடித்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் விளாசும் 2-வது சதமாகும் இது. 60 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர்.
பஹர் ஸமான் 42 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். கவாஜா நபாய் 2, முகமது நவாஸ் 0, சல்மான் அலி ஆகா 0, ஷதப் கான் 7 ரன்களில் வீழ்ந்தனர். இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுசங்கா 3, தசன் ஷனகா 2, துஷ்மந்தா சமீரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முதல் விக்கெட்டுக்கு ஃபர்ஹான், பஹர் ஸமான் ஜோடி 176 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. டி20 உலகக் கோப்பை போட்டியில் எந்தவொரு விக்கெட்டுக்கும் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் நியூஸிலாந்து வீரர்கள் டிம் செய்பர்ட், பின் ஆலன் ஜோடி 175 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
கோலி சாதனை முறியடிப்பு: இந்தப் போட்டியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிக ரன்களைக் குவித்து இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி 319 ரன்கள் குவித்திருந்தார். அந்த சாதனையை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஃபர்ஹான் 383 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடத் தொடங்கியது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது இலங்கை. இதனால் 5 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்தார் ஷனகா. இருப்பினும் அவரால் வெற்றிக்கு தேவையான அந்த ஆறு ரன்களை பெற்றுத்தர முடியவில்லை.
சூப்பர் குரூப்-2 பிரிவில் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த பிரிவில் இருந்து முன்னேறும் மற்றொரு அணி எது என்ற சூழல் இருந்தது. ஏனெனில், நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அந்த வாய்ப்பில் இருந்தன. இரண்டு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றை முடித்தன. இதில் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.