போர்ட் ஆஃப் ஸ்பெயின்: போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 105.1 ஓவர்களில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 73, ராஸ்டன் சேஸ் 70 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்க விக்கெட்டை விரைவாக இழந்தது. இமாம் உல் ஹக் 14 ரன்களில் ஷமர் ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக், அஸான் அவாய்ஸுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார்.
அஸான் அவாய்ஸ் தனது முதல் அரை சதத்தை கடந்த நிலையில் 71 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அஸம், அப்துல்லா ஷஃபிக்குடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷஃபிக் 173 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இது அவருக்கு சர்வதேச டெஸ்ட் அரங்கில் 6-வது சதமாக அமைந்தது.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 66 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 107, பாபர் அஸம் 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது. பாபர் அஸம் 147 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய அவாய்ஸ் ஜாபர் 1, சல்மான் ஆகா ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். 87 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 126, முகமது ரிஸ்வான் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.