கராச்சி: பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சல்மான் அலி ஆகா நீக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஹ்சின் நக்வி அணித் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்து சல்மான் அலி ஆகா விரைவில் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசனுடன், மோஹ்சின் நக்வி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமல்லால் அணியின் மூத்த வீரர்களாக உள்ள பாபர் அசம், உஸ்மான் கான் ஆகியோரும் டி20 அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், புதிய கேப்டன் பதவிக்கு ஷாகீன் ஷா அப்ரிடி, ஷதப் கான் ஆகியோரது பெயர்களை மோஹ்சின் நக்வி பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.
நவீன டி20 கிரிக்கெட் வடிவத்துக்கு ஏற்ப அணியில் இளம் வீரர்களை இடம்பெறச் செய்து அணியை நல்லமுறையில் கட்டமைப்பது அவசியம் என்று நக்வியிடம், மைக் ஹெசன் தெரிவித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.