இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன்

 
விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்ட்: உடைந்து நொறுங்கிய பாகிஸ்தான்

ஆர்.முத்துக்குமார்

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று இங்கிலாந்தின் கடைசி விக்கெட் ஜோடியான ஜாஷ் டங், அட்கின்சன் இணைந்து 42 ரன்களை விளாச இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் என்ற ஓரளவுக்கு மரியாதைக்குரிய இலக்கை எட்டி ஆட்டமிழந்தது.

ஆனால், அதன் பிறகு நடந்ததுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சியின் தொடக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஷ் டங்கின் பந்து வீச்சில் பாகிஸ்தான் நொறுங்கி முதல் இன்னிங்ஸில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடக்க வீரர் ஆசன் ஆவைஸ் 46 ரன்களை நின்று எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக இரட்டை இலக்க ரன்களை எட்டியது சவுத் ஷகீல் (16). மற்றபடி தொலைபேசி எண்கள் போல் பாகிஸ்தான் ஸ்கோர் கார்டு காட்சியளித்தது. 1, 5, 8, 7, 1, 1, 2, 3 என்று மற்ற வீரர்கள் வரிசையாக வெளியேற இமாம் உல் ஹக் இறங்கவில்லை.

வீரர்களின் ஸ்கோர் இப்படியிருக்க உதிரிகள் வகையில் 20 ரன்கள் பாகிஸ்தானுக்குக் கிடைத்ததால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. அதில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தின் விக்கெட் கீப்பிங் கடும் விமர்சனங்களுக்குள்ளாகும். ஏனெனில் ‘பை’ மட்டுமே 12.

2-ம் நாள் ஆட்டத்தில் 13 விக்கெட்டுகள் சரிந்தன. இதில் ராபின்சன், ஆர்ச்சர் இணைந்து 7 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். பாகிஸ்தான் 110 ரன்களுக்கு மடிந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ஆலி ராபின்சன் 13 ஓவர்கள் வீசினார். அதில் 6 மெய்டன்கள். 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பந்துகள் இவரிடம் பேசின. துல்லியமும் ஸ்விங்கும் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது. ஜோப்ரா ஆர்ச்சர் நெருப்பைக் கக்கினார். மணிக்கு 148 கிமீ வேகம். அதுவும் ஒரு பந்து 151 கிமீ வேகம் என்று பறந்தது. அவர் 11 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

முன்னதாக, மோசமான வெளிச்சம் காரணமாக முதல் நாள் ஆட்டம் 248 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற நிலையில் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்தின் கடைசி விக்கெட் ஜோடியான கஸ் அட்கின்சன், ஜோஷ் டங் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஆடினர். இருவரும் இணைந்து 47 ரன்கள் சேர்த்து, முதல் நாளில் எதிர்பார்க்கப்பட்ட சமநிலை ஸ்கோரைக் காட்டிலும் இங்கிலாந்தை கணிசமாக முன்னிலைக்கு கொண்டு சென்றனர். 46 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த அட்கின்சன், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான் பந்தை லாங்-ஆஃப் திசையில் நேராக அடித்து ஆட்டமிழந்தார். டங் 48 பந்துகளில் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ் தொடங்கியவுடன் ராபின்சன் தொடக்கத்தில் பந்தை ஸ்விங் செய்ய, ஆர்ச்சர் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இமாமுக்குப் பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய ஷான் மசூத், 91 மைல் வேகம் (146 கி.மீ.) கொண்ட பந்து முழுமையாக உள்ளே வந்தபோது கால்களை நகர்த்தாமல் நின்றார். பந்து அவரது மட்டையில் பட்டு பின்னால் கேட்ச் ஆனது.

அப்துல்லா ஷஃபீக் எதிர்கொண்ட முதல் பந்தே 92 மைல் வேகத்தில் வீசப்பட்ட அச்சுறுத்தும் பவுன்சராக இருந்தது. அவர் குனிந்து தப்பிக்க முயன்றபோது பந்து அவரது கையில் பலமாகத் தாக்கியது. தொடர்ந்து வேகத்தை அதிகரித்த ஆர்ச்சர், ஆசான் அவைஸையும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கச் செய்தார். 8-வது ஓவரில் அவர் 94 மைல் வேகத்தைத் தொட்டார்.

காலை ஆட்டம் முடிவதற்கு 20 நிமிடங்கள் இருந்தபோது டங் பந்துவீச வந்தார். அவரைத் தொடர்ந்து உடனடியாக அட்கின்சனும் களமிறங்கினார்.

அட்கின்சன் வீசிய முதல் பந்திலேயே அவைஸை வீழ்த்திவிட்டதாக நினைத்தார். வேகமாக வீசப்பட்ட பவுன்சரை ஜேமி ஸ்மித் கேட்ச் செய்தார். ஆனால் ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் தோளில் பட்டது தெரியவந்ததால், அவுட் முடிவு மாற்றப்பட்டது. அடுத்த ஓவரிலேயே அவைஸை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பையும் அட்கின்சன் பெற்றார். ஆனால் இரண்டாவது ஸ்லிப்பில் புரூக் அந்த கேட்சை தவறவிட்டார். அடுத்த ஓவரிலேயே டங் பந்தில் ஷஃபீக் எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளையில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

முதல் டெஸ்டில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம், இந்தப் போட்டியில் அணிக்குத் திரும்பியிருந்தார். ஆனால் அவரால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டங் வீசிய பந்தை அவர் அடித்த நிலையில், மூன்றாவது ஸ்லிப்பில் ஜோர்டன் காக்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

இதன் பின்னர் ராபின்சன், சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் ரிவியூவில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதற்கிடையில் சிறிது நேரம் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பாகிஸ்தான் மீது தொடர்ந்து அழுத்தத்தை அதிகரித்து வந்த ஆர்ச்சருக்கும் இறுதியில் பலன் கிடைத்தது. உஸ்மான் பந்தை கட் செய்ய முயன்றார், பந்து அவரது மட்டையில் பட்டு ஸ்டம்புகளைத் தாக்கியதால் அவர் ஆட்டமிழந்தார். 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் என்று இருந்த பாகிஸ்தான் 6 ரன்களுக்கு அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் உண்மையில் வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 261 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது இங்கிலாந்து அணி. எமிலியோ கே 30, ஹாரி புரூக் 7 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். டக்கெட் 1, ஜோர்டான் காக்ஸ் 11, கேப்டன் ஜோ ரூட் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

SCROLL FOR NEXT