முகமது சிராஜ்

 
விளையாட்டு

‘மத பாகுபாடு இல்லை’ - ஆடும் லெவனில் சிராஜ் இல்லாதது குறித்து கிரண் ரிஜிஜூ விளக்கம்

வேட்டையன்

புதுடெல்லி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதில் மத ரீதியான பாகுபாடு எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

‘பெயர் காரணமாக ஆடும் லெவனில் சிராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது’ என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி இம்ரான் மசூத் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதற்கு பாஜக பதிலடி தந்தது. கிரிக்கெட் விளையாட்டில் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் செய்வதாக பாஜக தெரிவித்தது.

“இங்கே எவர் ஒருவரும் அவரது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படுவதோ அல்லது புறக்கணிக்கப்படுவதோ இல்லை. தகுதி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி யாரேனும் எண்ணினால் அது சரியல்ல. நாம் அனைவரும் ஒன்று என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்” என்று கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து vs இந்தியா

நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நவ.19-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பந்து வீசி 368 ரன்களில் நியூஸிலாந்து அணியை ஆட்டமிழக்க செய்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 159 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. ஜெய்ஸ்வால் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 52, படிக்கல் 16 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சிராஜ் சேர்க்கப்படவில்லை. பும்ரா, ஆகாஷ் தீப், அன்ஷுல் காம்போஜ், பிரசித் கிருஷ்ணா என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் அனுபவ வீரரான சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்காதது பேசு பொருளாகி உள்ளது. ஏனெனில், வெளிநாடுகளில் 29 டெஸ்ட் போட்டியில் விளையாடி 108 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு ஆடுகளங்கள் அடங்கும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT