ஆதித்யா அசோக்
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் மோதும் நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள புதுமுக லெக் ஸ்பின்னர் ஆதித்யா அசோக் தமிழ்நாட்டு வம்சாவளித் தொடர்புடையவர்.
இவர் தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகேயுள்ள வேலூரில் பிறந்தவர். இவருக்கு 4 வயதாக இருந்தபோது இவர் குடும்பம் நியூஸிலாந்தின் ஆக்லாந்திற்கு குடியேறினர். முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் வதோதராவில் இவரது குடும்ப உறவினர்கள் உள்ளனர்.
இவர் லெக் ஸ்பின்னர் என்பதோடு நல்ல வலுவான கூக்ளி பந்துகளை வீசுவது இவரது பலம். இஷ் சோதியின் வழிவருபவர் என்கிறது இவரைப்பற்றிய தகவல்கள். 23 வயதாகும் ஆதித்யா அசோக் 3 வெள்ளைப்பந்து சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார். கடைசியாக டிசம்பர் 2023-ல் சர்வதேச வெள்ளைப்பந்து போட்டியில் ஆடினார்.
நியூஸிலாந்து ஏ அணியில் லிஸ்ட் ஏ மற்றும் 4 நாள் கவுண்டி போட்டிகளில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தவர்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இரண்டு ஏ தொடர்களுக்கு இடையே அவர் சென்னையில் சூப்பர் கிங்ஸ் அகாடமிக்கும் வருகை தந்தார் என்பதே, இதில் ஸ்பின் மையப் பயிற்சியில் கலந்து கொண்டு அரிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
இவர் இதுவரை 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மொத்தம் 2 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். 23 முதல் தரப் போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும் 39 லிஸ்ட் ஏ போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் அனைத்து டி20களில் 32 ஆட்டங்களில் 31 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சுமாராக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். லிஸ்ட் ஏ-வில் 61 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 282 ரன்களை எடுத்துள்ளார்.