வெலிங்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்காக 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டக் பிரேஸ்வெல் விளையாடியுள்ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 74 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். மேலும் பேட்டிங்கில், 568 ரன்களும் எடுத்துள்ளார்.
21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 விக்கெட்களும் சர்வதேச டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் என சர்வதேச போட்டிகளில் மொத்தம் 120 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் மொத்தம் 915 ரன்களைக் குவித்துள்ளார்.
2023-ம் ஆண்டுக்குப் பிறகு இவர் நியூஸிலாந்து அணிக்காக விளையாடவில்லை. விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தான் 35 வயதாகும் பிரேஸ்வெல் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். ஓய்வு முடிவை அறிவித்துள்ளடக் பிரேஸ்வெல்லுக்கு நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.