ஆக்லாந்து: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது. டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டம் நாளை (4-ம் தேதி) ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இருந்து மார்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீள சாப்மேனுக்கு மேலும் 2 வாரங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல், தோள்பட்டைக் காயத்திலிருந்து ரச்சின் ரவீந்திராவும் முழுமையாகக் குணமடையவில்லை என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, முதல் 3 ஆட்டங்களுக்கான அணியில் ஹென்றி நிக்கோல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி 2 ஆட்டங்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த டிம் ஷெய்ஃபர்ட், தற்போது முழுத் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசி 2 ஆட்டங்களுக்கான அணியில் டீன் ஃபாக்ஸ்கிராஃப்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், அணியுடன் இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியின் உடற்தகுதி பரிசோதிக்கப்பட உள்ளது. மேட் ஃபிஷர் கூடுதல் பந்துவீச்சாளராக தொடர்ந்து அணியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 3 ஆட்டங்களுக்கான அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டாம் லேதம், டேரில் மிட்செல், டிம் செய்ஃபர்ட், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஃபிஷர், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஹென்றி நிக்கோல்ஸ், நேதன் ஸ்மித், வில் யங், பிளேர் டிக்னர்.
கடைசி 2 ஆட்டங்களுக்கான அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், வில் யங், ஜேக்கப் டஃபி, மேட் ஃபிஷர், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், லாக்கி பெர்குசன், மிட்ச் ஹே, நிக் கெல்லி, டிம் ஷெய்ஃபர்ட், பிளேர் டிக்னர்.