டேரில் மிட்செல்
ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேரில் மிட்செல், வில் யங் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்ஜன் ஷா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஆதித்யா அசோக் நீக்கப்பட்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஜெய்டன் லெனாக்ஸ் சேர்க்கப்பட்டார். இது அவருக்கு அறிமுக ஆட்டமாக அமைந்தது.
இந்திய அணியிலும் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி மந்தமான ஆடுகளத்தால் ரன்கள் சேர்க்க திணறியது. ரோஹித் சர்மா 11 பந்துகளை சந்தித்த பிறகே தனது ரன் கணக்கை தொடங்கினார். முதல் 5 ஓவர்களில் இந்திய அணி 10 ரன்களே சேர்த்தது. இதன் பின்னர் ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் சுதாரித்துக் கொண்டு சீராக ரன்கள் சேர்க்கத் தொடங்கினர்.
ரோஹித் சர்மா 38 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்டியன் கிளார்க் 128 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்தை மிட் ஆஃப் திசையில் விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்காமல் ஸ்வீப்பர் கவர் திசையில் நின்ற வில் யங்கிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி 12.2 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். மறுபுறம் தனது 17-வது அரை சதத்தை கடந்த ஷுப்மன் கில் 53 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் தோள்பட்டை உயரத்துக்கு வீசிய பவுன்சரை கட்டுப்பாடு இல்லாமல் வளைத்து அடித்த போது மிட்விக்கெட் திசையில் டேரில் மிட்செல்லிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்டியன் கிளார்க் வீசிய பந்தை மிட் ஆஃப் திசையில் விளாச முயன்றபோது மைக்கேல் பிரேஸ்வெலிடம் கேட்ச் ஆனது.
கிறிஸ்டியன் கிளார்க் தனது அடுத்த ஓவரில் விராட் கோலியை அவுட்டாக்கி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். விராட் கோலி 29 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்டியன் கிளார்க் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை பாயிண்ட் திசையில் கட்ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது.
ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி அடுத்த 19 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 3 விக்கெட்களை பறிகொடுத்து நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் கே.எல்.ராகுலுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
5-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மைக்கேல் பிரேஸ்வெல் பிரித்தார். ரவீந்திர ஜடேஜா 44 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 38.1 ஓவர்களில் 191 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி 21 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஜாக் ஃபோக்ஸ் பந்திலும், ஹர்ஷித் ராணா 2 ரன்களில் ஜெய்டன் லெனாக்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி பவர்பிளேவில் மட்டையை சுழற்றிய கே.எல்.ராகுல் 87 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் தனது 8-வது சதத்தை விளாசினார். அற்புதமாக விளையாடிய கே.எல்.ராகுல் 92 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் சேர்க்க 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. மொகமது சிராஜ் 2 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணி சார்பில் கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதையடுத்து 285 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களான டெவன் கான்வே 16 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் போல்டானார். ஹென்றி நிக்கோல்ஸ் 10 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 12.4 ஓவர்களில் 46 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் வில் யங்குடன் இணைந்த டேரில் மிட்செல் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இருவரும் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அபாரமாக விளையாடி வந்த வில் யங் 98 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் மிட்விக்கெட் திசையில் நிதிஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வில் யங், டேரில் மிட்செல் ஜோடி 162 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கிளென் பிலிப்ஸ் களமிறங்கினார்.
நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 10 ஓவர்களில் 58 ரன்கள் தேவையாக இருந்தன. நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்ட டேரில் மிட்செல் 96 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச அரங்கில் இது அவரது 8-வது சதமாக அமைந்தது. இந்த சதத்தில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.
டேரில் மிட்செல்லின் அபாரமான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 117 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 131 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது நியூஸிலாந்து அணி. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 18-ம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.