

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள்.படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 7 மணியளவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியைக்காண தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள் திரள்வர் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் இன்று (ஜன. 15) காலை தொடங்குகிறது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைக்கின்றனர்.
அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் வழியாக காளைகள், ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,000 காளைகள் பங்கேற்கின்றன. ஒரு மணி நேரத்தில் 80 முதல் 90 காளைகள் வரை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சித்ரா, காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.
வாடிவாசல், விழா மேடை, வீரர்கள் களமிறங்கும் இடம், காளைகளை பரிசோதனை செய்யும் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இப்போட்டியை காண தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள் திரள்வர் என்பதால், அவர்களுக்கான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையை சேர்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள், அதிகாலை முதலே காளைகளை பரிசோதித்து அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர்.