விளையாட்டு

4-வது டி20-ல் இந்தியாவை 87 ரன்களில் வீழ்த்தியது நியூஸிலாந்து: பிலிப்ஸ், டஃபி அபாரம்

வேட்டையன்

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 87 ரன்களில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர்கள் கிளென் பிலிப்ஸ் மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. தற்போது நியூஸிலாந்து அணி உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் இந்தியா வென்றது. அதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க்கில் 4-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பந்து வீச முடிவு செய்தார்.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. இதில் நியூஸிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்கள் விளாசினார். மைக்கேல் பிரேஸ்வெல் 65, ஃபின் ஆலன் 31, டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்தனர்.

260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் (4) மற்றும் இஷான் கிஷன் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் 33 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. அபிஷேக் சர்மா 27, ஷ்ரேயஸ் ஐயர் 22 ரன்களில் வெளியேறினர்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் நிதிஷ் குமார் ரெட்டி - 21, அக்சர் படேல் - 7, நமன் தீர் - 28, அர்ஷ்தீப் சிங் - 0, திலக் வர்மா - 35 ரன்கள் என ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் 87 ரன்களில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து சார்பில் ஜேக்கப் டஃபி 4 ஓவர்கள் வீசி, 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சான்ட்னர் மற்றும் ஃபிஷ்ஷர் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆடம் மில்னே 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் வரும் 1-ம் தேதி ஹாமில்டனில் நடைபெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT