ஆக்லாந்து: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லேதம் 63 ரன்கள் சேர்த்து அசத்தினார். ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் என்ற நிலையில் கட்டுப்படுத்தினர் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள்.
அதிகபட்சமாக கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளரான கோபானி மொகோயேனா 20 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்தார். ஜார்ஜ் லின்டே 23, டயான் ஃபாரெஸ்டர் 17, ஜெரால்டு கோட்ஸி 16, டோனி டி ஸோர்ஸி 15, கானர் எஸ்டர்ஹுய்சன் 15, ஜேசன் ஸ்மித் 10 ரன்கள் சேர்த்தனர்.
வியான் முல்டர் 0, ரூபின் ஹெர்மான் 4, கேப்டன் கேசவ் மகாராஜ் 3 ரன்களில் நடையை கட்டினர். நியூஸிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன், மிட்செல் சாண்ட்னர், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். லாக்கி பெர்குசன், கோல் மெக்கோன்கி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
137 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தனது 4-வது அரை சதத்தை கடந்த தொடக்க வீரரான டாம் லேதம் 55 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேவன் கான்வே 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு டேவன் கான்வே, டாம் லேதம் ஜோடி 11 ஓவர்களில் 96 ரன்களை குவித்து அசத்தியது. டிம் ராபின்சன் 17, நிக் கெல்லி ஒரு ரன் சேர்த்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. 4-வது போட்டி வெலிங்டனில் நாளை (22-ம் தேதி) நடைபெறுகிறது.பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டாம் லேதம்.