சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஆடவர் பிரிவில் சென்னை எஸ்ஆர்எம், கோவை கற்பகம் பல்கலைக்கழகம், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, சென்னை ஜேப்பியார் கல்லூரி, சென்னை நியூ கல்லூரி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
மகளிர் பிரிவில் சென்னை ஐசிஎஃப், எஸ்ஆர்எம், டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு காவல்துறை அணி, எஸ்டிஏடி அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. அனைத்து போட்டிகளும் மாலை 5 மணிக்கு தொடங்கும்.
இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு கோப்பையும் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மகளிர் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு பி.ஜான் நினைவு கோப்பையும், பரிசுத் தொகையும் வழங்கப்படும்.