முஸ்தபிசுர் ரஹ்மான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்த முடிவு குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) மற்றும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) கவலை தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அறிவுறுத்தலின் படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா-வங்கதேசம் இடையே நிலவி வரும் இருதரப்பு பதற்றத்துக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாகக் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகள், விளையாட்டை அரசியலோடு கலக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன:
ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் ஆலோசகர் கே.சி.தியாகி கூறும்போது, “கிரிக்கெட்டையும், அரசியலையும் கலக்கக் கூடாது. தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகள் சாத்தியமில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், விளையாட்டை அரசியலிலிருந்து பிரித்து வைத்திருக்க வேண்டும்,” என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஷாருக்கான் மட்டுமே குறிவைக்கப்படுவதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதாவது ஷாரூக்கானை மட்டும் இதில் கேள்விக்குட்படுத்துவது மதச்சார்புடையதாகும், அதே கேகேஆர் அணியின் சக உரிமையாளர்களான நடிகை ஜூஹி சாவ்லா, அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் 45% பங்கு வைத்துள்ளனர். ஏன் இவர்களை விமர்சனம் செய்ய தைரியம் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே போல் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் லாவூ ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயுலு “இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள விரிசலை வர்த்தகம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் மூலம் சரிசெய்ய முயற்சிக்க வேண்டுமே தவிர, அதை மேலும் மோசமாக்கக் கூடாது,” என்றார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துள்லா கூறும்போது, “ஒரு தனிப்பட்ட வீரரை வெளியேற்றுவதால் வங்கதேசத்தில் நிலைமை சீராகுமா? பாகிஸ்தான் வேறு வங்கதேசம் வேறு, வங்கதேசம் நம் நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்பவில்லை. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையின்மையை அதிகரிக்கவே செய்யும்,” என்று எச்சரித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக மூத்த தலைவர் ஒருவர் இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, “பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். அண்டை நாடுகளுடனான பதற்றத்தை அதிகரிக்கும் முடிவுகளைத் தவிர்த்திருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
அதேவேளையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத், “பிசிசிஐ மற்றும் கேகேஆர் எடுத்த முடிவு, இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் சம்பவங்களுக்கான எதிர்வினையே. முகமது யூனுஸ் அரசு அடிப்படைவாத சக்திகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது,” என்று கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.