

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மான் நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு அணி நிர்வாகத்திடமிருந்து எந்த விதமான நஷ்ட ஈடும் கிடைக்காது என்று தெரிகிறது.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதால், கேகேஆர் அணியில் இருந்து முஸ்டாபிஸுரை நீக்கவேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரின. இதையடுத்து பிசிசிஐ உத்தரவின் பேரில் முஸ்டாபிஸுரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்தது.
கடந்த மாதம், துபாயில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர் அணி சார்பில் ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் முஸ்டாபிஸுர் எடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் கேகேஆர் நிர்வாகம் சார்பில் அவருக்கு எந்த வித நஷ்ட ஈட்டுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கேகேஆர் அணி வட்டாரங்கள் கூறும்போது, “ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும். அவர்களது ஊதியம் காப்பீடு செய்யப்படுகிறது. வீரர்கள் அணியில் இணைந்த பின்னர் பயிற்சி முகாமிலோ அல்லது போட்டியின்போது காயமடைந்து விலகினால் மட்டுமே சம்பந்தப்பட்ட வீரருக்கு ஊதியம் வழங்கப்படும்.
முஸ்டாபிஸுர் ரஹ்மான் காயம் அடையாததாலும், அணியில் இன்னும் இணையாததாலும், தற்போதைய நிலைமையில் அவருக்கு காப்பீடு பொருந்தாது. எனவே, ஒரு பைசா கூட முஸ்டாபிஸுருக்கு செலுத்த வேண்டிய அதிகாரப்பூர்வக் கடமை கேகேஆர் அணிக்கு இல்லை” என்று தெரிவித்தன.